பொள்ளாச்சியில் கீழே கிடந்ததாகக் கூறி கைத்துப்பாக்கியை காவல் நிலையத்தில் மூதாட்டி ஒப்படைத்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அன்னூர் ஒட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற 72 வயது மூதாட்டி, தனது பேரனுடன் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்று துப்பாக்கி ஒன்று கீழே கிடந்ததாக, கைத்துப்பாக்கி ஒன்றை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் மூதாட்டி மற்றும் பேரன் விஜய் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், மூதாட்டியின் மகன் செல்வன் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளி என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து செல்வம்தான் துப்பாக்கியை வைத்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் துப்பாக்கி, செல்வத்திடம் எப்படி வந்தது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொள்ளாச்சி கிழக்கு, மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் செல்வத்தின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் தனிப்படை போலீசார் செல்வத்தை தேடி வருகின்றனர் செல்வம் கைது செய்யப்பட்டால் மட்டுமே கைத்துப்பாக்கி குறித்து உண்மையான தகவல்கள் வெளிவரும் என்று தெரிகிறது. மூதாட்டியிடம் இருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.