தமிழ்நாடு

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் சிபிஐ விசாரணை

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் சிபிஐ விசாரணை

Rasus

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் 2-ஆவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் 2-ஆவது நாளாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதற்காக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, குட்கா ஆலை அதிபர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தது.

அதேபோல் குட்கா ஊழல் நடந்ததாக கூறப்படும் காலத்தில் சென்னை காவல்துறையில் துணை ஆணையராக பணியாற்றிய ஜெயக்குமார், ஆய்வாளராக பணியாற்றிய சம்பத் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுமட்டுமின்றி இவ்வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு சிபிஐ ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் நேற்று 9 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கரும் இன்று இரண்டாது நாளாக சிபிஐ முன்பு ஆஜ‌ராக உள்ளார். லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி வழங்கியதாக எழுந்த புகார் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.