சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.
குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக விஜயபாஸ்கரின் மற்றொரு உதவியாளர் சீனிவாசனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சீனிவாசன் வீடு சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது.
இதே போல் வழக்கறிஞர் வேலுகார்த்திக் என்பவர் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. சென்னை மட்டுமின்றி தஞ்சாவூரில் உள்ள வேலுகார்த்திக்கின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் தூரத்து உறவினர்தான் இந்த வேலுகார்த்திக். இவர் திவாகரனின் நெருங்கிய நண்பர் என்றும் சொல்லப்படுகிறது. வேலுகார்த்திக்கிடம் கடந்த ஞாயிற்றுகிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. 2015ஆம் ஆண்டு குட்கா வழக்கில் ராஜேந்திரன் என்பவருக்கு வேலுகார்த்திகேயன் ஜாமீன் பெற்று கொடுத்துள்ளார். அதுதொடர்பான வழக்கு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.