சென்னை திருமங்கலத்தில், கடந்த நவம்பர் 12-ம் தேதி (தீபாவளியன்று) இரவு 9:50 மணியளவில் உணவக உரிமையாளர் ஒருவர், கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை தன் எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 14-ம் தேதி பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பெட்ரோல் குண்டுவீச்சுகள், மது மற்றும் போதையில் பட்டப்பகலில் நடந்த கொலைகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற தெருக்கள், குண்டர்கள் கும்பல் அதிகரிப்பு ஆகியவையே ஊழல் திமுக அரசின் வெற்றியாகும்.
சென்னை திருமங்கலத்தில் மாமூல் பணம் தர மறுத்ததால் உணவக மேலாளரை ரவுடிகள் அடித்து உதைத்துள்ளனர். உணவக உரிமையாளர் இதுகுறித்து புகார் அளித்தும் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களைக் காவல்துறை கைது செய்யவில்லை என்று தெரியவருகிறது. மக்களைப் பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ள மாநில அரசு விரும்புகிறது என்று நினைக்கவேண்டியுள்ளது” எனக் கூறியிருந்தார்.
இதற்கு திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை காவல்துறை ஆகியோரின் எக்ஸ் தள ஐ.டி.க்களை டேக் செய்த நெட்டிசன் ஒருவர், விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு தற்போது சென்னை காவல்துறை தரப்பில் எக்ஸ் தளத்திலேயே பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், “12.11.2023 அன்று இரவு காமதேனு ரோஸ்மில்க் கடையின் ஊழியர் கணேசன் என்பவரிடமிருந்து புகார் வந்தது. ஜெட்சன் என்பவர், தங்களின் கடை அருகே வந்து அவரது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக புகார் வந்தது.
இது குறித்து வி-5 திருமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஜெட்சன் அருகிலுள்ள உணவகத்தின் முன்னாள் ஊழியர் என்பதும், கணேசனின் கீழ் பணிபுரியும் சிறுவனை ஜெட்சன் தாக்கிய விவகாரத்தில் ஜெட்சனுக்கும் கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சிகளும், இதை உறுதிப்படுத்துகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் மாமூல் கேட்கப்பட்டதாக கூறுவது, அடிப்படையற்றது மற்றும் ஆதாரமற்றது. மேலும் பாதிக்கப்பட்ட கணேசன் அளித்த புகாரில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை.” எனக்கூறப்பட்டுள்ளது.