சென்னையில் 335 கோடி ரூபாய் செலவில் 3 மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கணேசபுரம், ஓட்டேரி மற்றும் தியாகராய நகர் உஸ்மான் சாலையில் 3 புதிய மேம்பாலங்களைக் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக 335 கோடி ரூபாயை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மூலம் பெற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, கணேசபுரத்தில் 142 கோடி ரூபாயில் 680 மீட்டர் நீளம் மற்றும் 15 புள்ளி 20 மீட்டர் அகலத்திற்கு 4 வழி மேம்பாலம் கட்டப்பட உள்ளது. ஓட்டேரியில் 62 கோடி ரூபாயிலும் தியாகராய நகர் உஸ்மான் சாலையில் 131 கோடி ரூபாய் செலவில் 2 வழிச்சாலை மேம்பாலமும் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய பிறகு டெண்டர் விடப்படும் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.