தமிழ்நாடு

இனி குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

இனி குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

கலிலுல்லா

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிப்பதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனத்திலிருந்து குப்பைகளை எறிபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தரம் பிரிக்கப்படாத குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை ஒரு டன் அளவுக்கு பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தோட்டக்கழிவுகள் மற்றும் மரக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு 200 ரூபாயும், கழிவுநீர் மற்றும் கால்வாய் பகுதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவுகளை எரிப்பவர்களுக்கு 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.