தமிழ்நாடு

பேரக்குழந்தையை 3 லட்சத்துக்கு விற்ற தாத்தா, பாட்டி - காதல் தம்பதி புகார்

webteam

சேலத்தில் 4 மாத குழந்தையை 3 லட்சத்திற்கு பெண்ணின் பெற்றோர்களே விற்பனை செய்துவிட்டதாகவும், குழந்தையை மீட்டுக் தரகோரியும்  இளம் தம்பதியினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். 

சேலத்தை அடுத்த ஆட்டையாம்பட்டியை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - மீனா தம்பதி. இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து திருப்பூரில் உள்ள பணியன் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மீனாவிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து மீனாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் குழந்தையை மீனாவின் பெற்றோரான சாந்தி மற்றும் பொன்னுசாமியிடம் ஒப்படைத்து பராமரிக்க கூறியுள்ளனர். 

ஆனால் மீனாவின் பெற்றோர்கள் 2 மாதங்களுக்கு முன்பு குழந்தையை 3 லட்சத்திற்கு சென்னையை சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. உடல்நலம் தேரியதும் மீனாவின் பெற்றோரிடம் குழந்தையை கேட்டபோது குழந்தை இல்லை எனவும் குழந்தையை வேறொருவரிடம் வளர்க்க கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து குழந்தையை மீட்டுத்தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று குழந்தையின் பெற்றோரான ராஜா மற்றும் மீனாவும் குழந்தையை மீட்டு தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்தனர்.