தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம உள்ளாட்சிகளிலும் வரும் மே ஒன்றாம் தேதியன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஊராட்சிகளின் 2021- 22ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, பணிகளின் முன்னேற்ற நிலைகள், ஒன்றிய மாநில அரசுகளின் திட்டங்களுக்கான பயனாளர்கள் தேர்வு, ஊட்டச்சத்து இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அதேநேரத்தில் கடந்த நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்திலும் பிளக்ஸ்பேனர் மூலமும் கிராம ஊராட்சி நிர்வாகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தந்து அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளது. இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இது மட்டுமின்றி தண்ணீர் தினம் மற்றும் உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.