தமிழ்நாடு

ஆதாரமின்றி எதையும் பேச மாட்டேன்: நடிகை கெளதமி

webteam

ஒருவரைப் பற்றி தேவையில்லாமலோ‌, ஆதாரம் இல்லாமலோ பேசுவது என் வழக்கமல்ல என்று நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் கடந்த முறை எழுதிய கடிதம் தொடர்பாக உண்மை அறியாமல் பலரும் முன்வைத்த எதிர்மறை விமர்சனங்கள் தன்னைக் காயப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் என்று தலைப்பிட்டு தான் எழுதிய கடிதத்திலேயே தான் யாரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருந்ததாகவும், அந்தக் கடிதத்தை கமல்ஹாசனோடு தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை எடுத்துரைக்கும் பொருட்டுமே எழுதியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

மிகச்சரியான காரணங்கள் பொருட்டே முடிவினை எடுத்ததாகவும் அது எந்தவகையிலும் திரும்பப் பெறுவதற்கு வழியில்லை என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். ஒரு தாயாக ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள, நேர்மறை எண்ணங்களோடு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர விரும்புவதாகவும் கெளதமி தெரிவித்துள்ளார். 

இந்த உலகத்தில் மிகச்சிறந்த கண்ணியமிக்க மனிதர்கள் இருப்பதாகவும், அவர்களோடு இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மோசமான, மகிழ்வை குலைக்கக்கூடிய வகையிலான நிகழ்வுகள் நடக்கக்கூடும், அதிலிருந்து விடுபட்டு நேர்மறையான எண்ணத்தோடு, மகிழ்வான, சிறப்பான பக்கத்தை நோக்கி நகர வேண்டும் என்றும், அதைத்தான் தான் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த 20 ஆண்டுகால வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த தான், தற்போது என்னைச் சார்ந்த மனிதர்களுக்காக உழைப்பதில் உற்சாகமடைவதாகவும், இது குறித்து பிறரின் மதிப்பீடுகளை தான் கோரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள கெளதமி, இந்தப் பயணத்தில் ஒத்த கருத்துடையவர்கள் தன்னோடு இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். கடினமான காலகட்டத்தில் என் மீது அன்பு கொண்டு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் தனது அன்பை தெரிவித்துக் கொள்வதாகவும் கெளதமி தெரிவித்துள்ளார். தேவையற்ற வகையில் வார்த்தைகளை கொட்டுபவள் நான் அல்ல என்றும், நான் யாரைப்பற்றியும் காரணமின்றியோ, ஆதாரமில்லாமலோ பேச மாட்டேன் என்பதை தன்னைப் பற்றி தவறான மதிப்பீடுகள் கொண்டவர்கள் உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.