கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் பெற்ற 50க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு நிலுவையில் உள்ள கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செயல்பட்டு வரும் காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் ஏராளமான பொதுமக்கள், விவசாய கடன், நகை கடன், சுய உதவி குழுக்கள் கடன் பெற்று பலனடைந்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியான தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக, 2021ல் அரசாணை வெளியிட்டு தள்ளுபடி அறிவித்திருந்தது. மேலும் இந்த கடன் தொகையை தள்ளுபடி செய்ய பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சுய உதவி குழு மூலம் ஏராளமான பெண்கள் கடன் பெற்றுள்ளனர். இந்த குழுவில் உள்ள பெண்கள் தாங்கள் பெற்ற கடனை வட்டியோடு சேர்த்து தவணை முறையில் திருப்பி செலுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு தற்போது நிலுவையில் உள்ள கடனை தள்ளுபடி செய்ய முடியாது என வங்கி அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து கடன் பெற்ற 50க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு நிலுவையில் உள்ள கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவை அளித்த பெண்கள், இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெண்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.