மாணவிகள்  PT WEB
தமிழ்நாடு

‘பாத்ரூமை பூட்டி வச்சுடறாங்க... கேட்டா அசிங்கமா திட்றாங்க’ - அரசுப்பள்ளி மாணவிகள் கண்ணீர் வீடியோ!

திருமங்கலத்தில் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்களை கொடுமைபடுத்துவதாக கூறி அரசுப் பள்ளி மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமல் ராஜ்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் திலகவதி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கொடுமை தாங்க முடியாமல் பல மாணவிகள் டி.சி வாங்கி சென்றதாகக் கூறி அரசுப் பள்ளி மாணவிகள் சிலர் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், "மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் நாங்கள். இங்கு சமீபத்தில் புதிதாக திலகவதி என்ற ஒரு தலைமை ஆசிரியர் வந்துள்ளார். நாங்கள் யாரேனும் தாமதமாக வந்தால் தலைமையாசிரியர் திலகவதி வெளியில் நிற்க வைத்து விடுகிறார். மாணவிகள் மாதவிடாய் பிரச்சனையில் இருக்கும் போதுகூட, வெயிலில் முட்டி போடச் சொல்லிக் கஷ்டப்படுத்துகிறார்.

எங்கள் ஊரிலிருந்து காலை 7 மணிக்கெல்லாம் பஸ் ஏறினால்தான் இங்கு நேரத்துக்கு வரமுடிகிறது. அப்படி ஏறியப்பின்னும் பஸ் லேட் ஆவதால் எங்களுக்கு தாமதம் ஆகிறது. ஆனால் அவற்றை புரிந்துகொள்ளாமல், ஆபாச வார்த்தைகளால் திட்டுகிறார். கழிப்பறையில் பெரும்பாலும் தண்ணீர் வசதிகூட இருப்பதில்லை. சாப்பிடுவதற்குக் கூட சரியாக விடுவதில்லை.

தலைமையாசிரியர் கொடுமையால் பல மாணவிகள் டிசி வாங்கி சென்றுள்ளனர். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அரசுப் பள்ளியை நம்பிதான் உள்ளோம். எதாவது புகார் தெரிவித்தால் டி.சி வாங்கி சென்று விடுங்கள் என்று கூறுகிறார்.

தலைமையாசிரியர் திலகவதி

கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என்று புகார் சொன்னால் ‘ஒரு மணி நேரம் மட்டுமே ஒருநாளில் தண்ணீர் வரும்’ என்கிறார். பெரிய அதிகாரிகள் வந்தால் மட்டும்தான் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். நாங்கள் புகார் தெரிவித்தால் பெற்றோர்கள் கூட்டம் போட்டு எங்களைப் பற்றி தப்புத்தப்பாக சொல்வதால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது" என வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் அவர்கள், தங்கள் பிள்ளைகளை கழிவறை செல்ல அனுமதிக்காததால், பிள்ளைகள் தண்ணீர் அருந்துவதையே தவிர்க்கின்றனர் என்பதுபோன்ற கடும்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மாணவிகளின் பெற்றோர் ஆட்சியரிடம் அளித்த புகார்

இந்த சம்பவம் தொடர்பாக, தலைமை ஆசிரியர் திலகவதிக்கு நாம் தொடர்பு கொண்டும் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் நம்மைத் தொடர்பு கொள்ளவும் இல்லை.

அதேநேரம் இதுகுறித்து மதுரை மாவட்ட கல்வி அலுவலர், கார்த்திகாவைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, "மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ பற்றி இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. மாணவிகளின் பெற்றோர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் மட்டுமே தெரியும். அந்த வீடியோ இருந்தால் நீங்கள் எனக்கு அனுப்பி விடுங்கள்” என்றார்.

மதுரை மாவட்ட கல்வி அலுவலர், கார்த்திகா

மேலும் “இது தொடர்பாக எங்களுடைய மேல் அதிகாரிக்குத் தகவல் கொடுத்துள்ளோம் அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள்” என தெரிவித்தார். விரைந்து இப்பிரச்னை சரிசெய்யப்பட்டு, மாணவிகளுக்கு முறையான கல்வி கிடைக்கவேண்டும் என்பதே பெற்றோரின் வேண்டுகோளாக இருக்கிறது.