Student father protest pt desk
தமிழ்நாடு

திருப்பூர்: அரசுப் பள்ளி மாணவரை சுற்றிவளைத்து தாக்கிய மற்றொரு அரசுப் பள்ளி மாணவர்கள் - காரணம் என்ன?

webteam

செய்தியாளர்: சுரேஷ் குமார்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள சின்னசாமி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரிசி கடை வீதி பகுதியில் அமைந்துள்ள கேஎஸ்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என பலரும் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு பேருந்து மூலமாக செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று கேஎஸ்சி பள்ளி மாணவனை 50-க்கும் மேற்பட்ட சின்னசாமி பள்ளி மாணவர்கள் கட்டை, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்து நிலையத்தின் நான்கு புறமும் இருந்து வந்த மாணவர்கள், கட்டை, பைப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு கத்தியபடியே மாணவனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் அரைமணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து மகனை அழைத்துச் செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த தந்தை, தனது மகன் தாக்கப்பட்டதை அறிந்து பேருந்து நிலையத்தின் முன்பாக சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார். அவரை சமாதானம் செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு பள்ளி மாணவர்களிடையே யார் கெத்து என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தினம்தோறும் தாக்கிக் கொள்வதாகவும் இன்று உச்சகட்டமாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் அளவிற்கு மாணவர்கள் சென்று இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.