தமிழ்நாடு

ஜோலார்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு

ஜோலார்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு

webteam

சென்னையில் நில‌வும் தண்ணீர்ப் பி‌ரச்னையை சமாளிக்க வேலூரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர்.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் குடிக்க, குளிக்க என எதற்குமே தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இந்தச் சூழலில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்காக 65 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மேட்டூரிலிருந்து கூட்டு குடிநீர்த் திட்டக் குழாய் மூலம் பாலாற்றுக்கு வரும் நீரை, குழாய்கள் மூலம் ஜோலார்பேட்டைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை குடிநீர் வாரியம், ரயில்வே துறை, காவிரி கூட்டு குடிநீர்த் திட்ட அதிகாரிகள் ஆகியோர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம், மேட்டுசக்கரக் குப்பம் ‌ஆகிய பகுதிகளில் ஆ‌ய்வு நடத்தினர். மூன்று கட்ட ஆய்வுகள் நிறைவடைந்த நிலையில், இன்று நான்காம் க‌ட்ட ஆய்வு நடத்தப்பட்டது. 

இதனிடையே வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில்,வேலூர் மக்கள் பயன்படுத்தியது போ‌க எஞ்சிய நீரையே சென்னைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அதிமுக து‌ணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.