தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி பெற்றோருடன் முடங்கிய குழந்தை : மீட்டெடுத்த அரசு அதிகாரிகள்..!

மாற்றுத்திறனாளி பெற்றோருடன் முடங்கிய குழந்தை : மீட்டெடுத்த அரசு அதிகாரிகள்..!

webteam

செங்கல்பட்டில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெற்றோருடன் முடங்கிய குழந்தையை மாற்றுத்திறனாளி வாரிய நலத்துறையினர் மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மேரி அனுசுயா - ஜான். இவர்கள் இருவரும் காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்களுக்கு பவுசியா என்ற
4 வயது மகள் உள்ளார். இந்தக் குழந்தை ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 40 நாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்துள்ளது.

தாய், தந்தை இருவராலும் பேச முடியாது மற்றும் குழந்தை பேசுவதையும் கேட்க முடியாது என்பதால் குழந்தையும் அமைதியாக இருந்துள்ளது. இதனால் குழந்தையின் மன அழுத்தம் அதிகரித்து கவலையாக இருந்திருக்கிறது. இதை அறிந்த குழந்தையின் பாட்டி மற்றும் சித்தி சொந்த ஊரான தென்காசிக்கு அனுப்பி மாற்றுத்திறனாளி தம்பதியுடன் குழந்தையையும் வைக்குமாறு மாநில ஆணையருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி நலவாரியத்திற்கும் கோரிக்கை சென்றிருக்கிறது.

இதையடுத்து மாநில மாற்றுத்திறனாளி நல வாரிய ஆணையர் டாம் ஜானிவர்கீஸ் உத்தரவுபடி, கேளம்பாக்கம் பகுதியில் உள்ள குழந்தையை நேரில் சென்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டடனர். அத்துடன் சிறப்பாசிரியர்கள் மூலம் குழந்தையின் மனசோர்வை நீக்கி மகிழ்வித்தனர். பின்னர், உணவு தின்பண்டங்கள் வழங்கி பெற்றோருடன் அந்த சிறுமியை தென்காசியில் உள்ள சித்தி மற்றும் பாட்டி வீட்டிற்கு காரில் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.