தமிழ்நாடு

“மாணவர்களின் உயிருடன் விளையாடாமல் 10-ஆம் வகுப்பு தேர்வை தள்ளிவையுங்கள்” - ஸ்டாலின்

webteam

மாணவர்களின் உயிருடன் விளையாடாமல் 10-ஆம் வகுப்புத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி 10 வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தத் தேர்வை நடத்தாமல் தள்ளி வைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதில் ஆரம்பத்தில் இருந்தே அலட்சியத்துடனும், முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளுடனும் நடந்து கொள்வதைப் போலவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதிலும் அ.தி.மு.க. அரசு அவசரம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சருக்கு 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் தாய் எழுதியுள்ளதாக வார இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி, அனைத்து பெற்றோரும் 10ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பால் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட்டு, பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.