தமிழ்நாடு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

webteam

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த அதிமுக ஒன்றிய செயலாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிமுக ஆட்சியில், விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் விஜய நல்லதம்பி. முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரரான இவர், தன்னிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்த சிவகாசி கோட்டையூரைச் சேர்ந்த தங்கதுரை என்பவரிடம் 'உன் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு அமைப்பாளர் போஸ்டிங் வாங்கித் தருகிறேன். 3.5 லட்சம் கொடு. வேலைக்கான ஆர்டர் வாங்கித் தருகிறேன் என்று விஜய நல்லதம்பி கூறியதை அடுத்து அதை நம்பிய தங்கதுரை 3.5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

அப்போது உடன் சென்ற கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷ், யாருக்கும் தெரியாமல் தன்னுடைய செல்போனில் பணம் கொடுத்ததை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதையடுத்து நெடுநாட்களாகியும் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் அலையவிட்ட விஜய நல்லதம்பி, அந்த பணத்தை மோசடி செய்துள்ளார். இதையடுத்து பணம் கொடுத்தபோது தனது தம்பி சதீஷ் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளரிடம் கிருஷ்ணவேணி புகார் அளித்தார்.

இந்நிலையில், காவல்துறையின் விசாரணையில், குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய விஜய நல்லதம்பி... '14-ஆம் தேதி இன்டர்வியூ. 15-ஆம் தேதி ஆர்டர் காஃபி வந்திரும். அமைச்சருக்கு கொடுக்கணும். விருதுநகர் கலெக்டரே வாங்குறாரு. மூன்றரை லட்சத்தை கம்பல்சரியா கொடுத்தாகணும்.' என்று சொல்கிறார்.

அப்போது பணம் கொண்டு வந்தவர்கள், 'எந்த திசையைப் பார்த்து பணம் கொடுக்கணும்? என்று கேட்க, அதற்கு விஜய நல்லதம்பி, 'மனசு நல்ல மனசா இருந்தா போதும்' என்று சொல்கிறார். கிருஷ்ணவேணி தொடர்ந்த இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை விஜய நல்லதம்பியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய நல்லதம்பி மேல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஆட்சேபனை தெரிவித்ததால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.

உயர்நீதிமன்ற வேலைக்கு ஆர்டர் வாங்கித் தருவதாகவும் விஜய நல்லதம்பி மோசடி செய்திருக்கிறார். ரூ.3 கோடி மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்து கைதாகி சிறையில் அடைபட்டதும், இன்று வரையிலும் நிபந்தனை ஜாமீனில் இருப்பதும் இவரால் தான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.