தமிழ்நாடு

தாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை

தாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை

webteam

திண்டுக்கல்லில் தாயின் நினைவு நாளில் திதி கொடுக்க அதிகாரி விடுமுறை அளிக்கவில்லை எனக்கூறி மின்வாரிய ஊழியர்
தற்கொலை செய்துக்கொண்டார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்நிலைய சாலையில் வசித்து வந்தவர் தனபால். இவர் பழனியை அடுத்த ஆயக்குடியில்
மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்தார். தனபாலின் தாய் இறந்து ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில், சொந்த ஊரான
ராமநாதபுரத்திற்க்கு சென்று திவசம் செய்துவர தனது மேல் அதிகாரியிடம் இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டுள்ளார். கஜா புயல்
பாதித்து பல இடங்களில் இன்னும் மின்கம்பங்கள் சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதால், மேல் அதிகாரி இரண்டு நாள்
விடுமுறையை தனபாலுக்கு கொடுக்க மறுத்துள்ளார். 

விடுமுறை கிடைக்காத மனவருத்தத்தில் இருந்த தனபால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனபால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து பழனி நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். 

இந்த நிலையில் தனது தற்கொலைக்கான காரணத்தை தனபால் எழுதி வைத்த கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியது. அதில் தனது தாயின் திவசத்திற்கு விடுமுறை அளிக்காததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளார். இந்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கஜா புயல் பாதித்த பல இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் தங்கள் வேலை நேரத்தை விடவும் அதிகமாக வேலை செய்வதால் மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)