தமிழ்நாடு

நேருக்குநேர் மோத துணிச்சலில்லா எதிர்க்கட்சிகள் : அரசு வழக்கறிஞர்

webteam

தமிழக அரசுக்கு எதிராக நேரடி வழக்கு தொடராமல் பிறர் முதுகில் ஏறி எதிர்க்கட்சிகள் சவாரி செய்வதாக, நீதிமன்ற வாதத்தின் போது அரசு வழக்கறிஞர் விமர்சித்துள்ளார். 

தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசுக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் கடிதம் அளிக்கவில்லை எனவும், 
அவர்கள் முதலமைச்சரை மாற்றவேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் இது உட்கட்சி பிரச்சனை என்றும் கூறிய வழக்கறிஞர், அடிப்படை ஆதாரம் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகள் நேரடியாக வழக்கு தொடராமல், பிறர் முதுகில் ஏறி சவாரி செய்வதாகவும் அவர் வாதத்தின் போது தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை வரும் அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.