பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து அரசுப் பள்ளி ஆசிரியை பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறு, குறு தொழிலாளர்கள், அன்றாடம் வேலைக்கு போய் வருமானம் ஈட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியை.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம் கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கமலவல்லி, மாணவர்களின் குடும்பத்திற்கு தன்னால் ஆன உதவியை செய்துள்ளார். ஒவ்வொரு மாணவரின் குடும்பத்திற்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கியுள்ளார். மேலும் சிலரின் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப்பொருட்களையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து தெரிவித்த ஆசிரியர் கமலவல்லி, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே அன்றாடம் வேலைக்கு போய் வருமானம் ஈட்டுபவர்கள். கொரோனாவால் வருமானம் இன்றி தவிக்கும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய நினைத்தேன் என தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி ஆசிரியரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.