டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமனம் செய்து தமிழக அரசு அனுப்பிய கோப்பினை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பியுள்ளார். இதன் பின்னணியில் தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்பதை ஆளுநர் காரணமாக தெரிவித்துள்ளார்.
அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுவார்கள். அப்படி சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக தமிழக அரசு நியமனம் செய்து, அதன் கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியது.
இதையடுத்து இந்த நியமனம் தொடர்பாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது முதல் அதில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளார் கவர்னர்.
முன்னதாக கடந்த ஜூன் 30 ஆம் தேதி சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற போது அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்து கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியது தமிழக அரசு.
டி.என்.பி.எஸ்.சி க்கு 14 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில், 10 பேரின் பதவிக் காலமும் முடிந்து விட்டது. அந்த உறுப்பினர்களையும் நியமனம் செய்து தமிழக அரசு கோப்பினை ராஜ்பவனுக்கு அனுப்பியிருந்தது. அந்த கோப்புகளும் நிலுவையிலேயே உள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற நாளில் இருந்து இப்போதுவரை டி.என்.பி.எஸ்.சி க்கு பொறுப்பு தலைவராக இருப்பவர், முனியநாதன் என்ற அதிகாரிதான். அவர் அதன் உறுப்பினர்களில் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.