செய்தியாளர்: காமராஜ்
விக்கிரவாண்டி அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியபோது,
"நாடாளுமன்றத் தேர்தலில் பாமக டெபாசிட் இழந்தது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பாமக டெபாசிட் இழக்க வேண்டும். அன்னியூர் சிவா ஒரு லட்சம் வாக்குகளுக்கு அதிகமாக பெற்று வெற்றி பெற வேண்டும். இலவச பேருந்து, மகளிர் உரிமை தொகை என பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு சமூக நீதி பற்றி பாமக பேசலாமா" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழக ஆளுநர் ஆங்கிலேயர்கள் காலத்தில் பிராமணர்கள் மட்டும் ஆசிரியர்களாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அவருக்கு ஏன் வன்னியர்கள், பட்டியலினத்தவர்கள் என மற்ற சாதியினர் ஆசியர்களாக இருக்க முடியவில்லை என்று தெரியாதா?.
திராவிடர்கள் ஆட்சிக்குப் பிறகு எல்லா மாற்றமும் ஏற்பட்டுள்ளது" என்று பேசினார்.