ஆளுநர் RN ரவி முகநூல்
தமிழ்நாடு

பதவியேற்புக்கு காத்திருக்கும் பொன்முடி... டெல்லி புறப்பட்ட ஆளுநர் RN ரவி... காரணம் இதுதானா?!

பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு முதலமைச்சர் கடிதம் எழுதிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏவாக பொன்முடி தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் நேற்று அறிவித்தது. இதனை அடுத்து, மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க முடிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொன்முடியின் பதவிப் பிரமாணத்தினை நேற்று இரவோ அல்லது இன்று காலையிலோ செய்து வைக்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்றே கடிதம் எழுதினார்.

பொன்முடி - ஸ்டாலின்

அதன்படி இன்று காலை பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணத்தினை ஆளுநர் செய்துவைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு தாமதமாகும் என்று தெரிய வந்துள்ளது.

பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்துவைக்க நேற்று இரவு 7 மணி அளவில் ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்த நிலையில், 3 நாட்கள் பயணமாக இன்று காலை 6.30 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டார் ஆளுநர். வருகிற 16 ஆம் தேதிதான் சென்னை திரும்புகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டதன்படிதான் ஆளுநர் டெல்லி செல்கிறார் என கூறப்படுகிறது. இதற்கும் பொன்முடியின் பதவியேற்பிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என சொல்லப்பட்டாலும், உச்சநீதிமன்றம் பொன்முடி விவகாரத்தில் கூறியுள்ளவற்றை குறித்து ஆலோசனை பெறவே இவர் டெல்லி செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணியிடம் சில சட்ட ஆலோசனைகளை கேட்கதான் டெல்லி செல்கிறார் என்று சொல்லப்படுகிறது.