செய்தியாளஎர்: சகாய மெர்ஸி பாய்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்தின் 150வது திருவருகை நினைவேந்தல் மற்றும் உலக வைஷ்ணவ மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்... “500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண்ணில்தான் பக்தி தோன்றியது. சிவன் மற்றும் விஷ்னு குறித்தான பாடல்கள் மூலமும் நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்தியை பரப்பினர். தென்னிந்தியாவில் நான் மாணவனாக இருந்த போது இதனைக் கூறுவர். அதாவது, ‘திராவிட தேசம்’ என்று அழைக்கப்படுகிற தென் பகுதியில்தான் பக்தி உருவானது. ராமானுஜ ஆச்சாரியாரால்தான் இங்கிருந்து வடக்குப் பகுதிக்கு பக்தி பரவியது.
நாளுக்கு நாள் காலத்தின் தேவைக்கேற்ப பக்தி மாற்றியமைத்துக் கொண்டே இருந்தது. கார்டியா அமைப்பை உருவாக்கிய பக்தி சித்தாந்த சரஸ்வதி பிரபுபாத் ஸ்ரீகிருஷ்ண சைத்தண்ய மஹாபிரபுவால் கவரப்பட்டார். உதவி தேவையான மக்களுக்கு பல்வேறு உதவிகளை கார்டியா மிஷன் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது. பெரும் இடர்களில் இருந்து சமூகத்தை பாதுகாத்த சைத்தான்ய மஹாபிரபு உருவானது போன்று பிரபுபாத் சமூகம் பெரும் அழுத்தமான சூழல்களில் பாதுகாத்துள்ளார்.
தர்மத்தை பாதுகாக்கவும் தர்மத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பாரதத்தை பாதுகாக்கவும்தான் அனைத்து மகான்களும் தோன்றினார்கள். பால் போன்ற வெண்மையை தனியாக பிரிக்க முடியாதது போன்று இந்து தர்மத்தையும் பாரதத்திடமிருந்து பிரிக்க முடியாது.
பாரதம் என்பது இந்து சனாதன தர்மத்தின் செயல் உருவம். பாரத ராஷ்டிரத்தின் ஆன்மாதான் சனாதன தர்மம்.
சனாதன தர்மமின்றி பாரத நாட்டை நம்மால் கற்பனையாக கூட நினைத்துப் பார்க்க முடியாது. பாரத் ராஷ்டிரா என்பது சைத்தன்ய மஹாபிரபு, பிரபுபாத் போன்ற ரிஷிகளாலும் மகான்களாலும் தோற்றுவிக்கப்பட்டது.
பாரதம் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது? பாரதம் ஒரே அரசரால் ஆளப்படவில்லை. ஏராளமானோர் பாரதத்தை ஆண்டுள்ளனர். பத்ரிநாத் - ராமேஸ்வரம், பூரி - துவாரிகா, காஞ்சி - காமரூப் வரை ஒரே பாரதம்தான். இந்து தர்மம் தாக்குதலுக்குள்ளாகும் போதெல்லாம் அவதார்கள் தோன்றினார்கள்.
13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமிய படையெடுப்பில், இந்து தர்மத்தின் மடங்கள் அழிக்கப்பட்ட போது இந்து தர்மம் தாக்குதலுக்குள்ளானது. அடுத்த 300 ஆண்டுகளில் அதே நிலை நீடித்தது. தர்மம் தாக்குதலுக்குள்ளான போதெல்லாம் நாடு முழுவதும் பக்தி இயக்கங்கள் தலையெடுத்தன. இந்து தர்மம் தாக்குதலுக்குள்ளாகும் போதோ, இடர்களை சந்திக்கும் போதோ, பாரதமும் ஆக்கிரமிக்கப்பட்டது. அழிக்கப்பட்டது.
பொதுமக்கள் இந்து தர்மத்தை இழப்பதில் இருந்து பக்திதான் பாதுகாக்கும். அடுத்த 300 ஆண்டுகளில் பிரிட்டிஷாரின் படையெடுப்பின் போதும் இந்நிலத்தின் இந்து தர்மம் அழிக்கப்பட்டது. தற்போதும், நாட்டில் சமூகத்தால் பிரித்து வைக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை, தீண்டாமை உள்ளது. தலித் மக்களின் குடியிருப்புகளிலும் கார்டியா மிஷன் செயல்பட வேண்டும். அவர்களை வெளிக்கொணர வேண்டும். அதுதான், முழுமையான செயல்முறை” என்றார்.