Governor RN.Ravi file
தமிழ்நாடு

ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்றால்தான் வருகைப்பதிவு? அண்ணா பல்கலை நிகழ்ச்சியில் சர்ச்சை!

அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி வளாகத்தில் இன்று நடைபெற்ற ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால்தான், மாணவர்களுக்கு வருகைப்பதிவு என்று கூறப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

PT WEB

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இந்திய தேசிய ராணுவத்தின் முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்நிலையில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள ECE, CSE, IT துறைகளை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்யவேண்டும் எனவும் கல்லூரி முதல்வர் (CECG) துறைசார் தலைவர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக இன்று நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் நம்மிடையே தெரிவிக்கையில், “அதுமட்டுமல்ல. மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். என்றும் அப்போதுதான் இன்றைய நாளுக்கு வருகைப்பதிவு கொடுக்கப்படும் என்றும் எங்களுக்கு அறிவுறுத்தினர்” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்கு மணிநேர ஆய்வக பயிற்சி இருந்துள்ளது. அதைவிடுத்து அவர்கள் ஆளுநர் நிகழ்வில் கலந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இதுகுறித்து விளக்கமளித்த பல்கலைக்கழக துணைவேந்தர், “இதுவும் ஒரு கற்பித்தல்தான்” என்றார்.

இதற்கிடையே நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சுதந்திரப்போராட்டத்தில் காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை; நாம் சுதந்திரம் பெற நேதாஜியே முக்கிய காரணம். வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களை போல நேதாஜி தியாகமும் போற்றப்பட வேண்டும். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படியே 1947-ல் நாடு இரண்டாகப் பிரிந்தது” என்று பேசியுள்ளார்.