ஆளுநர் ரவி pt web
தமிழ்நாடு

“உபயோகமில்லாத பட்டதாரிகளைத்தான் உருவாக்குகிறோம்” - ஆல் பாஸ் குறித்தும் ஆளுநர் காட்டமான விமர்சனம்!

அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன. மோசமான கற்பித்தல் வழிமுறைகளால் 60% மாணவர்கள் குறைவான கல்வியை பெறுகின்றனர். இதன்மூலம் வேலைவாய்ப்பில்லாத, உபயோகமில்லாதப் பட்டதாரிகளைத்தான் உருவாக்குகிறோம். இது மிகமிக முக்கியமான பிரச்சனை.

PT WEB

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு think to dare என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மத்தியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “காமராஜர் கல்வியின் ஆற்றலை புரிந்திருந்தார். அதனால் பல கல்விக்கூடங்களை திறந்தார். மதிய உணவு வழங்கினார். அவர் ஏற்படுத்திய கட்டமைப்பில் பயணித்தோம். ஆனால், இன்று அந்த தொலைநோக்கு பார்வை இல்லை. அரசு பள்ளிகளின் தரம் குறைந்துள்ளது. தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறைந்துள்ளது. அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 75 சதவிகிதம் மாணவர்களால் எண்களைப் படிக்க முடியவில்லை. 40 சதவிகிதம் மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் கல்விதரம் குறைந்து வருகிறது. மாணவர்களின் கற்கும் திறன் குறைந்தும் அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் பட்டங்களும் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.

மோசமான கற்பித்தல் வழிமுறைகளால் 60% மாணவர்கள் குறைவான கல்வியை பெறுகின்றனர். இதன்மூலம் வேலைவாய்ப்பில்லாத, உபயோகமில்லாதப் பட்டதாரிகளைத்தான் உருவாக்குகிறோம். இது மிகமிக முக்கியமான பிரச்சனை.

பி.எம் ஸ்கூல் நல்ல முன்னெடுப்பு

மாணவர்கள் போதைக்கு அடிமை ஆகியுள்ளனர். மாணவர்கள் கஞ்சா மட்டுமில்லாமல் ஹாராயின், மெத்தாம்பீட்டாமைன் போன்ற Chemical synthetic drugsக்கு அடிமையாக உள்ளனர். போதை பழக்கத்தை கட்டுபடுத்திட வேண்டும். எளிதாக போதைப்பொருள் கிடைக்கிறது. வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் வருகின்றன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி போதைப்பொருள் வணிகம் நடைபெறுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் போதைபழக்கத்தை கட்டுபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என். ரவி

முன்னதாக ஆசிரியர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர், “தமிழக அரசு பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தை முன்னர் ஏற்றுக்கொண்டு தற்போது மறுக்கிறது. பிஎம்ஶ்ரீ பள்ளிகள் திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி வழங்கப்படும். மத்திய அரசு மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு நிதி வழங்குகிறது. பி.எம் ஸ்கூல் நல்ல முன்னெடுப்பு.

திராவிட அரசு ஒரு போதும் இடம் கொடுக்காது

புதிய கல்விகொள்கைக்கு மாற்று கிடையாது. அதனை அனைவரும் ஏற்க வேண்டும். மத்திய அரசு சிலபேரிடம் மட்டும் கருத்துக்களை பெற்று புதிய கல்விக்கொள்கையை கொண்டு வரவில்லை. பலதரப்பட்ட மக்கள், கல்வியாளர்களின் கருத்தினை பெற்றே புதிய கல்விகொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கும் மாநிலங்களும் புதிய கல்விகொள்கையை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றே சிந்திக்கிறது. எதிர்க்கும் மாநிலங்களும் வேறு பெயர்களில் புதிய கல்விகொள்கையை அமல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை” என தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி, ஆளுநர் ஆர்.என். ரவி

கடந்த 1 ஆம் தேதியும் தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்தார். அதுதொடர்பாக இன்று சென்னை வண்டலூரில் ஆசிரியர் தின விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இன்றைக்கு சிலர் தமிழக அரசின் பாடத் திட்டம் சரியில்லை என புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வீர முத்துவேல் போன்றோரும், அரசு பள்ளியில் பயின்ற மேலும் பலரும் ஐடி துறைகளில் உயர்‌பதவியில் உள்ளனர். பாடத்திட்டத்தை குறை கூறுவது நம்முடைய ஆசிரியர்களை, மாணவர்களை குறை கூறுவதற்கு சமம். இதற்கு எந்த விதத்திலும் திராவிட அரசும், நமது முதல்வரும் இடம் கொடுக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே சிறந்த கல்வி திட்டம் தமிழக கல்வி திட்டம்தான்” என பதிலளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.