தமிழ்நாடு

"ஆளுநர் ஒன்றும் தபால்காரர் அல்ல" - நீட் விவகாரத்தில் வானதி சீனிவாசன் ஆவேசம்

"ஆளுநர் ஒன்றும் தபால்காரர் அல்ல" - நீட் விவகாரத்தில் வானதி சீனிவாசன் ஆவேசம்

webteam

"ஆளுநர் ஒன்றும் தபால்காரர் அல்ல" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை மாநில அரசுக்கே ஆளுநர் என்.என். ரவி இன்று திருப்பி அனுப்பினார். தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்துக்கு பல்வேறு கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தக் கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த சூழலில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நீட் விலக்கு மசோதா குறித்து கடந்த சட்டப்பேரவைத் தொடரிலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநரே வைத்திருக்கிறார் என்று தமிழக அரசு முதலில் குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கூட திமுகவினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மாநில அரசு அனுப்பும் அனைத்து விஷயங்களையும் எந்த பரிசீலனையும் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு கிடையாது. அவ்வாறு செய்வதற்கு ஆளுநர் ஒன்றும் தபால்காரர் அல்ல. மசோதாவில் இருக்கும் விஷயங்கள் குறித்து தெளிவு பெறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புக்கு, இந்த மசோதா எந்த வகையில் மாறுப்பட்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.

எந்தக் காரணத்துக்காக மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தமிழக அரசை கட்டுப்படுத்தாது என உறுதிப்படுத்தும் வரை இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்" என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.