தமிழ்நாடு

ஆளுநர் இன்று அழைப்பாரா?

ஆளுநர் இன்று அழைப்பாரா?

webteam

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை பதவியேற்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை அழைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று மாலை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, எம் எல் ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்துப் பேசினர். இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை பதவியேற்குமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பாரா? அல்லது ஓ.பன்னீர்செல்வத்தையே முதலமைச்சராக தொடர அனுமதிப்பாரா என்ற கேள்வியுடன் ஆளுநரின் முடிவுக்காக தமிழகம் காத்துக் கிடக்கிறது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, பெரும்பான்மை பலம் உள்ளவரை முதலமைச்சராக பதவியேற்க அழைத்த பின்னர், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் அல்லது இரு தரப்பினரையும் ஒரே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அனுமதிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். இருதரப்புமே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில் சட்டசபையை ஆளுநர் முடக்கி வைக்கலாம் என்றும், இந்த அரசியல் குழப்பம் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவுக்கு வரலாம் என்று கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் இன்று மாலை அழைப்பு விடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.