தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1இல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றும் நேர்முகத் தேர்வுப் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. விதிப்படி தமிழ்வழியில் கல்வி பயின்றவருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவராக இருந்தும், எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்வழியில் பயின்றதற்கான ஒதுக்கீட்டின்கீழ் தேர்வானவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. மேலும், மசோதாவுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியிருந்தது.
8 மாதங்களாக மசோதா நிலுவையில் இருந்த நிலையில் தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்க மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது.