மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் பாண்டி - மணிமேகலை தம்பதியர். இவர்கள் மாட்டுச்சந்தையில் இருந்து ஜெர்சி வகை பசுமாட்டினை வாங்கி வந்து வீட்டில் வளர்த்து வந்ததோடு, அதில் பால்கறந்து பால்வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 7 வயதான பசுமாட்டை கவனிப்பாரின்றி சாலையில் விட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக அதற்கு வயிறு பெரிய அளவிற்கு வீங்கி இருந்துள்ளது. மேலும் பசு உணவு எதுவும் உண்ணாமல் நோய்வாய்ப்பட்டு எழுந்து நடக்க முடியாமல் தவித்துள்ளது.
இதனையடுத்து பாண்டியும் அவரது மனைவியும் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பசுமாட்டை சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மதுரை மாவட்ட தலைமை கால்நடை மருத்துவர் வைரசாமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பசுமாட்டின் வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது பிளாஸ்டிக் குப்பைகள் கிலோக்கணக்கில் இருப்பது தெரிய வந்துள்ளது.
உடனடியாக மயக்கமருந்து கொடுத்து 4 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை செய்து பசுவின் வயிற்றுபகுதியில் இருந்து 50 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள், சாக்குப்பைகள், துணிகள், கம்பி மற்றும் இரும்பு கழிவுகளை அகற்றினர். பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். அறுவைசிகிச்சை முடிவடைந்து பசுமாடு தற்போது நல்ல உடல்நலத்துடன் தேறி வருகிறது.
இதுகுறித்து கால்நடைத்துறை தலைமை மருத்துவர் வைரவசாமி பேசுகையில், “பால் கொடுத்து குடும்பத்திற்கு வருமானத்தை கொடுக்கும் பசுமாட்டை சாலையில் அலையவிடாமல் பாதுகாக்க வேண்டும். பசுமாடு வளர்ப்பவர்கள் பசுக்களை உரிய முறையில் வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.