தமிழ்நாடு

விரைவில் தொடங்கப்படும் தமிழ் “சொற்குவைத் திட்டம்”

webteam

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் “சொற்குவை” எனும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் “சொற்குவைத் திட்டம்” விரைவில் தொடங்கப்படும் என அத்துறையின் அமைச்சர் பாண்டியராஜன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தமிழ் சொற்களை அனைத்தையும் தொகுப்பது, சொற்களின் இலக்கண வகைகளை பதிவிடுதல், ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளை பதிவு செய்வது, தேடப்படும் தமிழ் சொற்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதுதொடர்பான அறிவிப்பை ஏற்கெனவே சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதற்கான பணிகள் தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பின்னர், இதன்மூலம் இணையம் வழியாக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் மக்கள் பலன் பெறலாம். தமிழகத்தில் உள்ள தமிழகர்களுக்காக மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு என்று தனியாக ஒரு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊரின் பெயர்கள் தமிழில் மாற்றப்படுவது உள்ளிட்ட சில புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.