தமிழ்நாடு

கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்புவேலி அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் - நீதிமன்றம்

கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்புவேலி அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் - நீதிமன்றம்

kaleelrahman

கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அதன்மூலம் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரை சேர்ந்த ஆர்.கிடியான் பாபு, பி.மோசஸ் ஆகிய சிறுவர்கள், தங்கள் குவாரியில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து பிள்ளைகளின் மரணத்திற்கு இழப்பீடு கோரி இருவரது பெற்றோர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில், மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. உயிர் இழப்பை பணத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். மனித உயிர்களின் இறப்பு நிச்சயம் என்றாலும், அது எப்போது நிகழும் என்பது நிச்சயமற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறந்த அனைவரும் நிச்சயமாக இறந்துவிடுவார்கள் என்றாலும், மற்றவர்களின் அலட்சியம் காரணமாக மரணம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

குடும்பத்தில் ஒருவரின் எதிர்பாராத மரணம் குடும்ப உறுப்பினர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன், ஒரு வெற்றிடத்தையும் விட்டுச்செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இழப்பீட்டுத் தொகையைக் கொண்டு இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாது என்றாலும், அது நிச்சயமாக வலிமிகுந்த இதயங்களுக்கு ஒரு மருந்தாக இருக்கும் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

'ஹைடெக் ராக் அக்ரேகேட்ஸ் ப்ராடக்ட்ஸ்' என்ற நிறுவனத்திற்கு இந்த இடம் முன்பு குத்தகைக்கு வழங்கப்பட்டு, அதில் பல அடிகள் ஆழத்திற்கு தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், குத்தகை காலம் முடிந்த பிறகு, அந்த நிறுவனமோ, அரசு நிர்வாகமோ வேலியை அமைக்காததால் இரு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கைவிடப்பட்ட குவாரியை சுற்றி வேலி அமைப்பதற்கோ அல்லது எச்சரிக்கை பலகை அமைப்பதற்கோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காததற்காக அப்பகுதி கிராமவாசிகள் கூட கேள்வி கேட்கவில்லை என்பதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குவாரி நிறுவனத்திடமிருந்து மாவட்ட நிர்வாகம் பெற்றுள்ள 25 லட்சத்து 31 ஆயிரத்து 250 ரூபாய் முன்வைப்பு தொகையை மகன்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு வட்டியுடன் வழங்க வேண்டும் என நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

குத்தகை காலம் முடிந்த பிறகு குத்தகைதாரர்கள் சம்பந்தப்பட்ட நிலம், தளத்தை வேலி அமைத்து வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள பிற அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள், அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.