தமிழ்நாடு

'பரிவுள்ள ஆளுமை', '1100-ல் விரைந்த சேவை' - ஆளுநர் உரையில் தமிழக அரசுக்கு பாராட்டு

'பரிவுள்ள ஆளுமை', '1100-ல் விரைந்த சேவை' - ஆளுநர் உரையில் தமிழக அரசுக்கு பாராட்டு

webteam

குடிமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே, முதல்வரின் உதவி மையத்தின் 1100 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம், அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும்" என்று தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை - கலைவாணர் அரங்கில் அவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

அவர் தனது உரையில், 'பரிவுள்ள ஆளுமை' என்பது இந்த அரசின் முக்கியக் கோட்பாடாகும். 'அம்மா திட்டம்', 'முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்', 'வட்ட இணையவழி மனுக்கள் கண்காணிப்பு அமைப்பு' மற்றும் 'அம்மா அழைப்பு மையம்' உள்ளிட்ட பல்வேறு குறை தீர்க்கும் வழிமுறைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள அனைத்து குறை தீர்க்கும் அமைப்புகளையும் முதல்வரின் உதவி மையம் வாயிலாக ஒருங்கிணைத்து, 'முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்' செயல்படுத்தப்படும். அனைத்துக் குறைகளையும் உரிய கால வரம்பிற்குட்பட்டு, தீர்வு காண்பதை உறுதிசெய்யும் வகையில், ஒரு வலுவான வழித்திட்ட அமைப்பும், குறைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கான முகப்புப் பக்கமும் உருவாக்கப்படும். குடிமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே, முதல்வரின் உதவி மையத்தின் 1100 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம், அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும்" என்றார்.