பட்டாசு விபத்து ஜி.பழனிவேல்
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: ஆய்வு செய்து கொண்டிருக்கும்போதே திடீரென வெடித்த பட்டாசுகள்; படுகாயம் அடைந்த அதிகாரிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பட்டாசு கடை ஆய்வுக்கு சென்றபோது எதிர்பாராமல் பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

webteam

முரண்பட்ட கருத்துகளால் ஏற்பட்ட குழப்பம்!

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29ஆம் தேதி பட்டாசு குடோன் வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்து, 13 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மத்திய-மாநில காவல்துறை மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, ஏற்பட்ட கோரவிபத்துக்கு அருகிலிருந்த உணவகத்தில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் கசிவு தான் காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, வெடி விபத்துக்கு கேஸ் சிலிண்டர் கசிவு காரணம் இல்லை என தெரிவித்தது. இதனால் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பட்டாசு விபத்து

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்கள் முறையாக உரிமம் பெற்றுள்ளதா? விதிகளுக்கு முரணாக செயல்படுகிறதா? அதிக அளவில் பட்டாசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் சரயு உத்தரவின் பேரில் தனி அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களாக இந்த தனி குழுக்கள் பட்டாசு கடைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வுக்கு சென்ற போது மீண்டும் விபத்துக்குள்ளான பட்டாசு குடோன்!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெ. காரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான தனியார் பட்டாசு குடோனில் ஆய்வு செய்ய சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி நிலவரித் திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, வட்டாட்சியர் முத்துப்பாண்டி மற்றும் பிற அலுவலர்கள் இன்று பகலில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, பட்டாசு குடோனின் மேலாளர் பட்டாசு குழுவின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே இருந்து பட்டாசுகள் கீழே விழுந்து தீப்பிடித்து வெடித்து சிதறி உள்ளது. இந்த விபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மற்றும் வட்டாட்சியர் முத்துப்பாண்டி, மேலாளர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படப்படவென்று பட்டாசுகள் வெடித்து கரும்புகை நிலவியது.

பட்டாசு விபத்து

அருகே இருந்த ஊழியர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட 3 பேரையும் மீட்டு ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலருக்கு 30 சதவீதம் அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. வட்டாட்சியர் மற்றும் மேலாளர் ஆகியோர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பட்டாசு விபத்து

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகளை பார்வையிட்டு தீவிர சிகிச்சைக்கு உத்தரவு விட்டார். ஏற்கனவே நடந்த பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியான நிலையில், தற்போது இரண்டாவது சம்பவமாக பட்டாசு குடோன் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பட்டாசு குடோன்களில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை என தெரிய வருகிறது. இதனால் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தற்போது நடந்த விபத்து குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.