தமிழ்நாடு

கொரோனா பேரிடர் காலத்தில் விலையில்லா மடிக்கணினி திட்டமே உறுதுணை: ஆளுநர்

கொரோனா பேரிடர் காலத்தில் விலையில்லா மடிக்கணினி திட்டமே உறுதுணை: ஆளுநர்

webteam

கொரோனா பேரிடர் காலத்தில் விலையில்லா மடிக்கணினி திட்டமே உறுதுணை என ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை - கலைவாணர் அரங்கில் அவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

அவர் தனது உரையில், ‘தமிழ்நாட்டின் மனித வளத்தை, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, இளைஞர்களின் திறனை முழுமையாக மேம்படுத்த வேண்டும். எனவே, நம் மாநிலத்தில் முன்னுரிமை பெற்ற முதலீடாக கல்வி தொடர்ந்து விளங்கி வருகிறது.

2017-18 ஆம் ஆண்டிலிருந்து, 19 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 5 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தக்கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் கூடுதலாகத் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் என ஆக மொத்தம், 9.69 இலட்சம் மாணவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு, நாளொன்றிற்கு 2 ஜி.பி. விலையில்லா தரவு சிம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து, இடைவிடாமல், கல்வி கற்பதை உறுதி செய்வதே, நடப்புக் கல்வியாண்டின் சவாலாகும்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவு, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட சலுகைகள் இப்பெருந்தொற்றுக் காலத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மற்றும் 10 தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வாயிலாக, மாணவர்கள் பாடங்களை கற்கும் வண்ணம், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

விலையில்லா மடிக்கணினிகள் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மடிக்கணினியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்கள் வாயிலாகவும், பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும், மின்னணு தொகுப்பில் பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” என்றார்.