தமிழ்நாடு

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சூசகம்

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சூசகம்

webteam

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு, மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்படவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 1989-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில், வேலையில்லாமல் இருந்த 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும், மக்கள் நலப் பணியாளர்களாக 2-7-1990 அன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 1991ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, இந்த 13,000 மக்கள் நலப் பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பிறகு 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது, அந்த 13,000 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் 2001ஆம் ஆண்டு, மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த போது, மறுபடியும் மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கலைஞர் 31-5-2006 அன்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தந்தார். பிறகு 2011ம் ஆண்டில் 13500 மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உத்தரவை பிறப்பித்தது.

அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த கடந்த 2014ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அந்ந மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கும், இந்த வழக்கின் மூல வழக்கு மற்றும் பிற வழக்குகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று பட்டியலிடப்பட்டிருந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், “பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கவுள்ளது, அதற்கான ஆலோசனைகளின் விவரங்கள் இன்னும் வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்படாததால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த தகவலால் மீண்டும் 13,500 மக்கள் நல பணியாளர்களுக்கும் பணி வழங்கப்படவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த காலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது நிகழ்ந்த விஷயங்களை ஒப்பிட்டால் இந்த கேள்வி மேலும் உறுதியாகிறது.

- நிரஞ்சன் குமார்