தமிழ்நாடு

ஜனவரி 31 வரை தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் ஜன. 31 வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், “ழுமுடக்கத்தின் போது விடுமுறை என்பதால், பொதுமக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் நாட்களில் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பினை பெற இயலாதவர்கள் ஜன.31ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணிக்காக நியாய விலைக்கடைகள் அனைத்தும் விடுமுறை தினமான ஜனவரி 7 ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை மற்றும் கரும்பு (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) ஆகியவை அடங்கும்.

இந்தத் தொகுப்புக்காக, மாநில அளவில் 2.15 கோடி குடும்பங்களுக்கு, மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.