அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40%ஆக உயர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு. முன்னதாக இது 30% என்றிருந்தது.
மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... “சாதிவாரி கணக்கெடுப்புக்காக ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்” - நெருக்கடியில் மத்திய அரசு
இந்த அறிவிப்புடன் சேர்த்து, ‘அரசுத்துறையிலுள்ள பணியிடங்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பணியிடங்கள் ஆகியவற்றில் தமிழக இளைஞர்களே 100 சதவிகிதம் நியமனம் செய்யப்படுவர். அதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்படும். மேலும், அனைத்து தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்’ என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, மனித வள மேலாண்மைத்துறையின் மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளிக்கும்போது இந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.