தமிழ்நாடு

அரூர்: நாணயத்தை விழுங்கிய குழந்தை; ஐந்தே நிமிடத்தில் அப்புறப்படுத்திய அரசு மருத்துவர்கள்

அரூர்: நாணயத்தை விழுங்கிய குழந்தை; ஐந்தே நிமிடத்தில் அப்புறப்படுத்திய அரசு மருத்துவர்கள்

webteam
அரூரில் நான்கு வயது குழந்தையொன்று, 5 ரூபாய் நாணயத்தை விழுங்கியதையடுத்து அக்குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் பெற்றோர். மருத்துவமனையில் ஐந்தே நிமிடத்தில் நேர்த்தியாக அந்த நாணயத்தை வெளியே எடுத்துள்ளனர் அரசு மருத்துவர்கள். இதைத்தொடர்ந்து மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றது.

தருமபுரி மாவட்டம் அரூர் வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முனிவேல் - ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு  நான்கு வயதில் ரிஷ்வந்த் என்கிற குழந்தை உள்ளார். நேற்று காலை குழந்தை ரிஷ்வந்த், தாய் ஜெயஸ்ரீயிடம் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு தின்பண்டங்களை வாங்க சென்றுள்ளார். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென வாயில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயத்தை சிறுவன் ரிஷ்வந்த் எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து தாய் ஜெயஸ்ரீயிடம், சிறுவன் தான் நாணயத்தை விழுங்கியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து தாய் ஜெயஸ்ரீ உறவினர்கள் உதவியுடன் உடனடியாக அரூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர் அருண் தலைமையில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். முதலில் குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது தொண்டை குழியில் நாணயம் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து ‘லரிங்கோ ஸ்கோப்’ உதவியுடன், 5 நிமிடத்தில் குழந்தையின் தொண்டைக் குழியில் மாட்டியிருந்த நாணயத்தை, பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த 5 நிமிடத்தில் துரிதமாக மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்யைளித்ததால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மருத்துவர்களின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

- சே.விவேகானந்தன்

இதையும் படிங்க... அமெரிக்காவுக்கு விமானம் ஏறியபின் வெளியான பரிசோதனை முடிவு: இரு குழந்தைகளுக்கு கொரோனா உறுதி