அமைச்சர் சிவசங்கர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“மக்களுக்கு பாதிப்பின்றி அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன” - அமைச்சர் சிவசங்கர்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக சங்கங்கள் சார்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தற்போதைய நிலவரம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக சங்கங்கள் இன்றுமுதல் (9.1.2024) தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இப்போராட்டத்தால் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான போக்குவரத்து சேவையானது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக போக்குவரத்து கழகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் போக்குவரத்துத்துறை தரப்பில், ‘தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக 10.51 சதவீத அளவுக்கு பேருந்துகள் இயங்கி வருகின்றன’ என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர்

அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோள்களுக்கு இணங்க மக்களுக்கு பாதிப்பின்றி அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போராடுவது என்பது தொழிற்சங்கங்களின் உரிமை.

அதே சமயம் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போராட்டத்தினை மேற்கொள்ளவேண்டும். இதுகுறித்து அதிகாலை முதல் அனைத்து அதிகாரிகளிடத்திலும் பேசிகொண்டுதான் இருக்கிறேன். எங்காவது பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றால் எங்கு என்று குறிப்பிடுங்கள். அங்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்கலாம்” - என்றார்.

மேலும் இது குறித்து MTC பொதுமேலாளர் ஆல்பி ஜன் வர்கீஸ் கூறுகையில், “பேருந்துகளில் மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம். போக்குவரத்து இயக்கங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்றார்.

ஒருபுறம் போக்குவரத்து சங்கங்கள் போராட்டத்தினை நடத்தி கொண்டிருக்க, மறுபுறம் அதிகாரிகள் அளிக்கும் இந்த தகவல்கள் மக்கள் மனதில் சற்று கேள்வியையும், குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.