தமிழ்நாடு

ரெட்பஸ் மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி

ரெட்பஸ் மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி

webteam

ரெட்பஸ் உள்ளிட்ட தனியார் செயலி மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை தமிழக போக்குவரத்துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்ற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ரெட் பஸ் உள்ளிட்ட பல தனியார் இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. கையாள எளிதான வசதி, செல்போனிலேயே செயலி இருப்பதால் தனியாக நேரம் செலவழிக்காமல் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், நிறைய தள்ளுபடிகள், நமக்கு பிடித்த பேருந்து, நமக்கு பிடித்த இருக்கை என அனைத்தையும் நாமே தேர்வு செய்யலாம் உள்ளிட்ட பல வசதிகள் இதில் இருக்கின்றன. இதனால் வெளியூர்களுக்கு பேருந்தில் செல்லும் பயணிகள் பலரும் தனியார் செயலிகளை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இந்தச் செயலிகள் மூலம் தமிழக அரசு சார்பில் பயன்பாட்டில் உள்ள அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய முடியாது. பேருந்து முன்பதிவுக்கு தமிழக அரசு சார்பிலான தனி செயலியை அரசு பயன்பாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில் தனியார் செயலியிலும் அரசு பேருந்தின் முன்பதிவுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டால் மக்களுக்கு முன்பதிவு எளிமையாக இருக்கும் என்று பலதரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இதனையடுத்து ரெட்பஸ் உள்ளிட்ட தனியார் செயலி மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை தமிழக போக்குவரத்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.