தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் இருந்து வெளியூர் மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு என மொதம் 72 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் மழை பெய்யும் சமயங்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக இருக்கிறது. 72 பேருந்துகளில் 10 முதல் 15 பேருந்துகள் மட்டுமே மழை பெய்யும் நேரத்தில் பேருந்தின் உட்புறம் மழை நீர் ஒழுகாமல் இருக்கின்றன. மற்ற பேருந்துகள் அனைத்திலும் மழை பெய்யும் நேரத்தில், பேருந்துக்குள்ளேயே மழை நீர் ஒழுகுவதால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் குடை பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பேருந்து ஓட்டுனர், மற்றும் நடத்துனர்களும் மழை நீரில் நனைந்தபடியே வாகனத்தை இயக்க வேண்டிய அவல நிலை இருக்கிறது. இதனால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசு பேருந்துகள் அனைத்தும் வருடம் ஒரு முறை தேனி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலத்தில் தணிக்கை காண்பித்த பிறகே இயக்கப்படுகின்றன. எனவே அரசு பேருந்துகளை தணிக்கை செய்யும் அதிகாரிகள் முறையாக தணிக்கை செய்து பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.