தமிழ்நாடு

அரசு பேருந்தின் நிலையை வீடியோவில் சொன்ன ஓட்டுநர் சஸ்பெண்ட்..!

Rasus

அரசு பேருந்தின் நிலை குறித்து குறைகூறி வீடியோ வெளியிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சொல்லி மாள முடியாது. அந்த அளவிற்கு பிரச்னைகள் வரும். காலை 7 மணிக்கு சென்று சேரவேண்டிய பேருந்து 10 மணி ஆனாலும் கூட பாதி தூரத்தை தாண்டியிருக்காது. மழை வந்தாலும் பேருந்துக்குள்ளேயே குடைபிடித்தப் படி அமர வேண்டியிருக்கும். போதாத குறைக்கு அடிக்கடி பஞ்சர் ஆகி இடையில் நின்று நமக்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தும். நமக்கு இது பயணம் செய்யும், ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ ஏற்படும் கசப்பான அனுபவங்கள்தான். ஆனால் தினசரி பேருந்தை இயக்கிச் செல்லும் ஓட்டுநர்கள் அத்தனை சிரமங்களையும் அனுபவிப்பது உண்டு. பேருந்து நன்றாக ஓடாததற்கு காரணம், முறையான பராமரிப்பின்மை. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கூட பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதும் ‘ரேட்ட தான் உயர்த்திட்டீங்க. கொஞ்சமாவது நல்ல பஸ்ஸ கொடுங்கப்பா’ என சமூகவலைத்தளங்களில் மக்கள் புலம்பித் தள்ளியதை பார்த்திருப்போம்.

இதனிடையே பழனியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் என்பவர் அரசு பேருந்துகளின் நிலையை குறைகூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பேருந்தில் முறையாக பிரேக் இல்லை.. மழை பெய்தால் முழுவதும் ஒழுகுகிறது என தனக்குள்ள பிரச்னைகளை அந்த வீடியோவில் அவர் கொட்டி தீர்த்திருந்தார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த சம்பவம் அதிகாரிகளுக்கு தெரியவர சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.