தமிழ்நாடு

நில விற்பனையில் ஏமாந்த பேருந்து ஓட்டுநர் - விரக்தியில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

நில விற்பனையில் ஏமாந்த பேருந்து ஓட்டுநர் - விரக்தியில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

Sinekadhara

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் நிலம் விற்பனையில் ஏமாந்த காரணத்தால் செல்போன் கோபுரத்தின்மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர் 5 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கீழே இறங்கினார்.

வந்தவாசியை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ். இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 90 செண்ட்டில் 2 ஏக்கர் நிலத்தை மட்டும் கடந்த 2007ஆம் ஆண்டு விற்பனை செய்ததில் ஏற்பட்ட குளறுபடியில் இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்கள் 3 ஏக்கர் 90 செண்ட்டையும் ஏமாற்றி வாங்கிவிட்டதாகவும், இந்த தகவல் கடந்த 2015ஆம் ஆண்டு ஓட்டுநர் ரமேஷூக்கு தெரியவரவே பலமுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்திருக்கிறார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் விரக்தியடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ் வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனையறிந்து அங்குவந்த வந்தவாசி வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உரிய முடிவுக்கு வராததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வந்தவாசி- சேத்பட் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் செல்போன் கோபுரத்தில் இருந்து ரமேஷ் கீழே இறங்கி வந்ததார். இதனால் அவருடைய 5 மணி நேர போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.