செய்தியாளர் ந. காதர் உசேன்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றிக்கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் இன்று காலை தஞ்சைக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையேவும் போட்டி நிலவி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தஞ்சை தொம்பன் குடிசை பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று பயணிகளை இறக்கி விட்டுள்ளது.
அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை வழி மறித்து நிறுத்திவிட்டு, பேருந்தில் இருந்து இறங்கி வந்து அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்துள்ளார்.
அச்சயமத்தில் அவரை சமாதானம் செய்ய நினைத்து, அரசு பேருந்து நடத்துநர் அவரிடம் பேச வந்துள்ளார். ஆனால் ஆத்திரத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், அந்த அரசுப் பேருந்து நடத்துநரை விரட்டிச்சென்று நடுரோட்டில் வைத்து தாக்கி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயணிகளை ஏற்றுவதில் நிலவும் இந்தப் போட்டி மனப்பான்மையை ஓட்டுநர்கள் கைவிட வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.