ஆவடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆவடியில் அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து விபத்து.. நடந்தது எப்படி?

பல லட்சம் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்துகளில் ஏற்படும் சில விபத்துகள் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன. அந்த வகையில் சென்னையை அடுத்த ஆவடியில் அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

PT WEB

பல லட்சம் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்துகளில் ஏற்படும் சில விபத்துகள் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன. அந்த வகையில் சென்னையை அடுத்த ஆவடியில் அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஆவடி -முதல் புதிய கன்னியம்மன் நகர் வரை செல்லும் 61K பேருந்து வழக்கம்போல சென்று கொண்டிருந்தது. 100க்கும் அதிகமான பயணிகள் பேருந்தில் இருந்த நிலையில், சிலர் படிக்கட்டில் நின்றவாறு பயணித்தனர். அப்போது பாரம் தாங்காமல் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு திடீரென உடைந்தது.  படிக்கட்டில் நின்றிருந்த பள்ளி மாணவர்கள் இருவர், ஒரு இளைஞர் ஆகியோர் கீழே விழுந்தனர்.

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பலவீனமான, சேதமடைந்த படிக்கட்டை ஓட்டுநரும், நடத்துநரும் ஏன் கவனிக்கவில்லை என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது. படிக்கட்டு சேதம் பற்றி ஏற்கனவே பணிமனையில் தெரிவிக்கப்பட்டும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

இதேபோல, வியாழன்று, சென்னை பள்ளிக்கரணையில் அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றது. இதனால் மேடவாக்கம் வேளச்சேரி பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 6 ஆம்தேதி சாலிகிராமத்தில் இருந்து சென்ற 17E பேருந்துக்குள் மழைநீர் கொட்டியது. இதனால் அவதிக்குள்ளான பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தும்,
இருக்கையில் அமர முடியாமல் நின்றுகொண்டும் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. 

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக ஒருநாளைக்கு 3,300 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  பல லட்சம் பேர் பயணிக்கும் பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது ஏன்? பயணிகளின் பாதுகாப்பு ஏன் உறுதி செய்யப்படவில்லை? என்ற கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறைதான் பதில் சொல்ல  வேண்டும்.