விஜய், புதுவை என்.ஆனந்த் pt web
தமிழ்நாடு

கேட்கப்பட்ட 21 கேள்விகள்.. தவெக தரப்பில் தரப்பட்ட பதில்கள் என்ன? முழு விபரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளதாக காவல்துறைக்கு அளித்த பதிலில் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு என்னென்ன பதில்கள் தரப்பட்டுள்ளன என்று பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்கள் காமராஜ் மற்றும் சந்தானகுமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் வரும் 23-ஆம் தேதி நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை சார்பில், மாநாடு நடத்த 21 நடைமுறை கேள்விகள் கேட்கப்பட்டதற்கு பதில் விளக்கத்தினை விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வழங்கினார்.

தவெக தலைவர் விஜய்

இதில் குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்படி, மாநாட்டில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளதாக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொண்டர்கள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறும் என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், முதியவர்கள் என தனித்தனியாக இருக்கைகள் போடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பிரபலங்கள் யாரும் பங்கேற்கிறார்களா என்ற கேள்விக்கு விஜய் தலைமையில் மாநாடு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணியில் இருந்து 8.45 மணிக்குள் விஜய் பேசும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

NAnand TVKmaanadu

ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களில் இருந்தும் தலா ஆயிரம் பேர் வர உள்ளதாகவும், மாநாட்டுக்கு வருவோர் வந்து செல்ல 14 முதல் 16 வழிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு அங்கேயே உணவு சமைத்து பார்சல் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 300 வேன்கள், 100 பேருந்துகள், ஆயிரம் இருசக்கர வாகனங்கள் மாநாட்டுக்கு வரும் என்றும் தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 21 விளக்கங்களை பரிசீலனை செய்த பின்னரே மாநாட்டிற்கான அனுமதி கொடுப்பதா ? இல்லையா ? என்பது தெரியவரும் என டிஎஸ்பி சுரேஷ் கூறியுள்ளார்.