வேலூரில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நாள்தோறும் பல பிரச்னைகளையும், பல இன்னல்களையும் சந்தித்து வருவதாகவும், அதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் வேலூர் மாவட்ட நிர்வாகம் நினைத்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது. வேலூர் விவசாயிகள் குரூப் (VELLORE FARMERS GROUP) என அந்த குரூப்-க்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த குரூப்பில் விவசாயம், கால்நடை, தோட்டக்கலைத்துறை என அனைத்து துறை அலுவலர்களும் இந்த வாட்ஸ் அப் குரூப்பில் விவசாயிகளுடன் இணைந்துள்ளனர். இதன்மூலம் விவசாயிகளின் சந்தேகம், கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். இந்த வாட்ஸ் அப் குழுவில் நீர் மேலாண்மை, வானிலை நிலவரங்கள் பகிரப்படுவதால், அதற்கு ஏற்றவகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடிவதாக விவசாயிகள் கூறுவதாகவும் ராமன் கூறினார். மாவட்ட நிர்வாகத்தின் இந்தச் செயலுக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.