சென்னை - திருவல்லிக்கேணி, வெங்கடேசன் தெரு Facebook
தமிழ்நாடு

குருவியாக மாறிய நபர்! 4 மாதங்களாக அனுபவித்த சித்ரவதை! உண்மை வெளிவந்தது எப்படி?

ஜெ.அன்பரசன்

திரைப்படங்களில் வரும் சம்பவங்களைப் போலவே, குருவிகள் மூலம் தங்கக்கடத்தல், அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்திரவதை என, அடுத்தடுத்து அதிர வைக்கும் சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

தங்கும் விடுதிகள் அதிகம் உள்ள, சென்னை - திருவல்லிக்கேணி, வெங்கடேசன் தெருவில், சாலையில் நடந்து சென்ற ஒருவரின் மீது, 'HELP' என்ற எழுதப்பட்ட காகிதம் விழுந்துள்ளது. தாம் கடத்தப்பட்டிருப்பதாகவும் தனது மனைவிக்கு தெரிவிக்குமாறும் கூறி, ஓர் அலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த எண்ணில் பேசியபோது, தனது கணவர் துபாயில் இருப்பதாகக் கூறி, நம்ப மறுத்துள்ளார் எதிர்முனையில் பேசிய பெண்.

பின்னர் இதுபற்றி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார் அந்த நபர். அதன்படி நடந்த சோதனைகளில், 'The Green Galaxy - OYO Lodge' விடுதியின் நான்காவது மாடியில், கொடூரமாக தாக்கப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ஒருவரை மீட்டனர் போலீசார். உடல் முழுவதும் ரத்தக்காயம், வீக்கம், தீக்காயம், முதுகில் தழும்புகள் என கடுமையான தாக்கப்பட்ட அவரை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர், கன்னியாகுமரி மாவட்டம் வருகப்பலை கிராமத்தைச் சேர்ந்த சாஜி மோன் எனத் தெரியவந்தது. அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்து வரவழைத்தனர். துபாயில் எலக்ட்ரீசியனாக இருந்த சாஜி மோன், ஒருகட்டத்தில் வேலையிழந்துள்ளார். அங்கு பழக்கமான, பென்னி - மாலிக் என்ற நண்பர்கள், தாங்கள் கொடுத்தனுப்பும் பொருளை, சொல்லும் நபரிடம் கொடுத்தால், தங்கள் தொழில் கூட்டாளிகள் நிறைய பணம் தருவார்கள் என்று ஆசை காட்டியுள்ளனர். அதை நம்பி, 5 லட்சம் ரூபாய்க்காக 4 மாதங்களுக்கு முன்பு குருவியாக மாறியுள்ளார் சாஜி மோன்.

2 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்கக்கட்டிகளை ஆசனவாய் வழியே உடலில் செலுத்திக் கொண்டு, சென்னை வந்துள்ளார். அவரை, விமான நிலையத்தில் காத்திருந்த 4 பேர், 'The Green Galaxy - OYO Lodge' க்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சாஜி மோனிடம் தங்கக்கட்டிகள் இல்லை.

சற்று நேரத்துக்கு முன்பு தன்னை சந்தித்த ஒரு கும்பல், இவர்களின் பெயரைச் சொல்லி தங்கத்தை வாங்கிக் கொண்டதாகவும், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை கடுமையாக இருந்ததால், தங்கத்தை கழிவறையிலேயே வைத்துவிட்டதாகவும் மாற்றி மாற்றி பேசியுள்ளார் சாஜி மோன்.

இதில் ஆவேசமுற்ற அவர்கள், சாஜி மோனின் கை கால்களைக் கட்டி, விடுதியறையில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். இப்படியே 4 மாதங்களாக, உணவு கொடுக்காமல், அடி உதை, லைட்டரால் சுட்டு தீக்காயம் என சித்ரவதை தொடர்ந்துள்ளது. இந்த நிலையில்தான், கழிவறைக்கு செல்வதாகக் கேட்டு, கட்டிலிருந்து விடுபட்டபோது, உதவி கேட்டு காகிதத்தில் எழுதி வெளியே வீசியுள்ளார் சாஜி மோன்.

இந்த வழக்கில், விடுதி உரிமையாளர் இம்ரான், சேப்பாக்கம் ஆசிப் பயஸ், அண்ணா சாலை முகமது ஆலிம் ஆப்கான், விடுதி ஊழியரான ஒடிசாவைச் சேர்ந்த வருந்தர தாஸ், மதுரை கோபி கண்ணன் என 5 பேரை, கைது செய்தது காவல்துறை. இவர்களில் இம்ரான், விடுதியை நடத்திக் கொண்டே, துபாயிலிருந்து குருவிகள் மூலம் தங்கத்தை கடத்தி வந்து சென்னையில் சப்ளை செய்துள்ளார்.

சென்னையில் இருந்து ஒருவரை குருவியாக அனுப்பி தங்கத்தை கடத்தி வருவது, செலவும் சவாலும் நிறைந்தது என்பதால், துபாயில் வேலை பார்த்து, இப்போது வேலைக்காக ஏங்கும் தமிழ்நாட்டினரை குருவியாக்கியுள்ளனர். இது இம்ரானின் ஸ்டைல். எந்தெந்த தங்க வியாபாரிகளுக்கு இம்ரான் கடத்தல் புரோக்கராக இருக்கிறார், எத்தனை முறை தங்கம் கடத்தியுள்ளார், இவரது பின்னணி என்ன, சாஜிமோன் கடத்தி வந்த தங்கம், உண்மையில் என்ன ஆனது என்பது பற்றி திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னையில் தங்கக்கடத்தல் கும்பலின் ஆதிக்கம் முதல் அதன் ஆணிவேர் வரை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.