high court pt desk
தமிழ்நாடு

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

webteam

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை நீதிமன்றம் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் மேல்முறையீடு செய்தார்.

gokulraj murder case

இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. உயர் நீதிமன்ற கிளையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பின் சென்னையில் விசாரிக்கப்பட்டது.

மதுரையில் விசாரணை நடந்த போது, இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது பிறழ் சாட்சி அளித்ததாக சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

gokulraj murder case

யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை, தவறுகளை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வாதிட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பு சாட்சிகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் வாதிடப்பட்டார். இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

gokulraj murder case

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று (ஜூன் 2) பிற்பகல் 2:15 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.