தமிழ்நாடு

'புதிய தலைமுறை'யின் கோபிசெட்டிபாளையம் செய்தியாளர் கொரோனாவால் உயிரிழப்பு

'புதிய தலைமுறை'யின் கோபிசெட்டிபாளையம் செய்தியாளர் கொரோனாவால் உயிரிழப்பு

webteam

'புதிய தலைமுறை'யின் கோபிசெட்டிப்பாளையம் செய்தியாளர் சந்திரசேகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

கொரோனா காலத்திலும் துடிப்புடன் பணியாற்றி செய்திகளை வழங்கி வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்டார். கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கியது.

இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று பிற்பகலில் அவரது உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிரமாக முயற்சித்தும் சிகிச்சை பலனளிக்காமல், சந்திரசேகரன் உயிரிழந்தார்.

47 வயதாகும் சந்திரசேகரன் கடந்த 10 ஆண்டுகளாக புதிய தலைமுறையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். செய்திகளை உடனுக்குடன் கொடுப்பதில் ஆர்வத்துடனும் துடிப்புடனும் இருந்த சந்திரசேகரனின் மறைவு சக ஊடகத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சந்திரசேகரனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு புதியதலைமுறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

'புதிய தலைமுறை'யின் கோபிசெட்டிபாளையம் செய்தியாளர் சந்திரசேகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சென்னை பத்திரிகையாளர் மன்றம், கொரோனா விழிப்புணர்வு பணியில் முன்களப் பணியாளராக செயல்பட்ட சந்திரசேகரன் மறைவு அதிர்ச்சியை தருகிறது. அவரது குடும்பத்திற்கு முன்களப் பணியாளருக்கான நிவாரண நிதியை அரசு வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளது.